வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு – வழிமுறைகள் – சட்டதிட்டங்கள்

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » வறுமை ஒழிப்பில் ஜகாத்தின் பங்கு - வழிமுறைகள் – சட்டதிட்டங்கள்

ஆசிரியர்: பேராசிரியர் M.S. ஸைய்யிது முஹம்மது மதனி

பொருளாதாரத்தில் இந்திய முஸ்லிம்கள் பின்னடைந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.  இந்த நிலைமை மாறுவதற்கு உரிய நடவடிக்கைகளை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும்.  சமூகநலனில் அக்கறைகொண்ட அனைத்து முஸ்லிம்களும் இதற்காக முயலவேண்டும். இந்தியாவில் முஸ்லிம் சமூகம் வறுமையிலும் பின்னடைவிலும் பஞ்சம், பசி, பிணி, கல்லாமை, சுகாதாரமின்மை போன்ற பேராபத்துக்களில் சிக்கித் தவிக்கிறது.  இதிலிருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வளிக்க அரசு சார்பிலும், சமூக ரீதியிலும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

வறுமையில் வாடுவோரின் நன்மைக்காக செழுமையில் வாழ்கிறவர்கள் மீது ஜகாத் எனும் வறுமை ஒழிப்புத்திட்டத்தை கடமையாக்கியுள்ளது இஸ்லாமிய சமயம். இஸ்லாம் பரவத் தொடங்கி ஒரு நூற்றாண்டு முடிவதற்குள் வறுமையில்லாத ஒரு சமூக அமைப்பை உருவாக்கி சாதனை படைத்த வரலாறும் இந்தச் சமயத்துக்கு உண்டு. ஆனால் இன்றைக்கு இந்தச் சமயத்தின் அங்கத்தினர்களில் பலர் வாழ்க்கையின் கடைக்கோடிக்குத் தள்ளப்பட்டு அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகளைக்-கூடப் பெற முடியாமல் பொருளாதாரத்தில் சிரமப்படுகிறார்கள்.

வறுமை ஒழிப்புக்கு இஸ்லாம் கூறும் ஜகாத் திட்டம் இன்றைக்குச் சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டால் முஸ்லிம் சமூகத்தில் பஞ்சமோ பட்டினியோ பசியோ இருக்காது.  ஆனால் இத்திட்டம் சரிவர நிறைவேற்றப்படாமலுள்ளது. அதை முறையாக நிறுவன ரீதியில் கட்டமைப்பு வசதிகளுடன் நடைமுறைப்படுத்துவதற்கு யாரும் முன்வருவதில்லை.  அத்துடன் நாட்டில் ஒன்றுபட்ட ஒரு முஸ்லிம் சமுதாயத் தலைமையும் இல்லை. இதனால் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திலும் ஏனைய நபித்தோழர்கள் தாபியீன்கள் தபஉத்தாபியீன்கள் கைருல்குரூனிலுள்ளவர்கள் வாழ்ந்த காலங்களிலெல்லாம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வறுமை ஒழிப்பு எனும் ஜகாத் திட்டத்தை இன்றைக்கு நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஆகவே அதற்குரிய காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.

அன்று நபித்தோழர்களிலும் ஏனைய முஸ்லிம்களிலும் ஜகாத் வழங்கத் தகுதியுடைய செல்வந்தர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள். அப்பொழுதே இறைத்தூதர் பற்பல ஊழியர்களை நியமித்து ஜகாத் வேலையை வாங்கியிருக்-கிறார்கள். ஆனால் இன்றைக்கு நமது இந்திய நாடு உலகில் முஸ்லிம்கள் கூடுதலாக வாழும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 18 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். ஏழை எளியோர்க்கு ஜகாத் வழங்குவதானது இஸ்லாமியர்களில் பணவசதி படைத்தவர்களின் கட்டாயக் கடமையாகும். இதை நிறைவேற்றாமல் அவர்களால் பூரண முஸ்லிம்களாக வாழ முடியாது என்பது அவர்கள் நம்பிக்கை.  இந்திய முஸ்லிம்கள் 18 கோடியில் குறைந்த பட்சம் 5% முஸ்லிம்களாவது (தொண்ணூறு லட்சம் பேர்) ஜகாத் கொடுக்கும் தகுதியைப் பெற்றிருப்பார்கள் என்பது உறுதி. இதைவிடக் கூடுதல் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தகுதியுள்ள-வர்களாக இருக்கக்-கூடும். இவர்களில் கோடீஸ்வரர்கள் இருப்பர்; மில்லினர்கள் இருப்பர்; லட்சாதிபதிகள், தொழிலதிபர்கள் உள்ளனர்.

அப்படியாயின் நமது இந்திய நாட்டில் நிறுவன ரீதியாக ஜகாத் வசூலிக்கவும் பகிர்ந்தளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் ஆண்டுதோறும் ஜகாத் நிதியாக சேரும் தொகை பல்லாயிரம் கோடிகளை எட்டியிருக்கும். ஏழை முஸ்லிம்களைப் பார்ப்பதே அரிதாக இருந்திருக்கும்.

இதற்காக பைத்துஸ்ஸகாத் நிறுவி பல நூறு ஊழியர்களை நியமனம் செய்திருக்க வேண்டும். பற்பல பைத்துஸ்ஸகாத் கட்டமைப்புகள் நமது நாட்டில் முஸ்லிம்களால் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் உண்மை என்னவெனில் முஸ்லிம் சமுதாயம் இன்றுவரை இதற்காகத் திட்டமிட்டதில்லை.

இதனால் ஜகாத் திட்டத்தைச் சரிவரப் புரிந்துகொள்ளாத சில முஸ்லிம்கள் ஜகாத்தை முறையாக நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறி இன்றைக்கு எதை எதையோ செய்கிறார்கள்.  கூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டு ஆங்காங்கே சிலர் வசூல் வேட்டையில் இறங்கி விடுகிறார்கள்.

சிலர் பைத்துல்மால் எனும் பெயர் கூறி அல்லது கூட்டுமுறையில் ஜகாத் எனும் பெயர் கூறி பணம் சேகரிக்கிறார்கள். உண்மை என்னவெனில் இவ்வாறு வசூல் செய்யப்பட்டு தொடங்கப்பட்ட பெரும்பாலான முயற்சிகள் நிறைவேறாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் பல முஸ்லிம் ஊர்களில் உள்ளன.  இவ்வாறு தொடங்கப்பட்ட பிறகு முகவரி தெரியாமல் மறைந்து போன எத்தனையோ பைத்துல்மால்கள் உள்ளன. கூட்டுமுறையில் ஜகாத் என்று விளம்பரப்படுத்திவிட்டு தொடங்கப்பட்ட எந்தத் திட்டமும் இன்றுவரையிலும் உருப்படவில்லை. எங்களிடம் உங்கள் ஜகாத்தைத் தாருங்கள் என்று கூறி பல லட்சங்களை சேகரிப்பார்கள். சில ஆயிரங்களையோ லட்சங்களையோ பகிர்ந்தளிப்பார்கள். பிறகு பகிர்ந்தளிப்பில் பல குளறுபடிகள் நடைபெறும். ஊரிலுள்ள பொதுவான ஏழை முஸ்லிம்கள்  கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவார்கள். தங்களை ஆதரிப்பவர்களுக்கும் தங்கள் உறவுகளுக்கும் வேண்டியவர்-களுக்கும், தங்களின் சங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதில் முன்னுரிமை வழங்குவார்கள்.

முதல்முறையாக முதல் ஆண்டில் ஜகாத் ஒதுக்கீட்டை இவர்களிடம் கொடுத்துதவிய முஸ்லிம் செல்வந்தர்கள் அடுத்த ஆண்டு இவர்களைப் பற்றி நம்பிக்கை இழந்து இரண்டாம் ஆண்டு இவர்கள் ஜகாத்தைக் கேட்டுப் போனால்கூட தரமறுப்பார்கள். பிறகு பைத்துல்மாலும் கூட்டு ஜகாத் திட்டமும் செயலிழக்கும். கஜானா காலியாகும்; பைத்துல்மால் அலுவலகம் இழுத்து மூடப்-படும். இதுதான் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது.

திட்டமிடப்படாத, கட்டமைப்பு வசதிகள் இல்லாத இம்மாதிரி கூட்டுமுயற்சிகளைத் தனிநபர் தொடங்கியும் வெற்றி பெற-வில்லை. இயக்கங்களால் அமைப்புகளால் தொடங்கப்பட்டும் வெற்றி பெற முடியவில்லை. ஒரு கால் நூற்றாண்டு காலம்கூட இதன் சேவைகள் தொடர்ந்து நடைபெற்றதாக வரலாறு இல்லை.  இதுபோன்ற பயனற்ற பகுதிநேர பைத்துல்மால் திட்டம் அல்லது கூட்டாக ஜகாத் வசூலிப்பு பகிர்ந்தளிப்புத் திட்டத்தைத் தொடங்கு-வதற்கு இனியும் முஸ்லிம் சமுதாயம் ஒத்துழைப்பு நல்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இதற்குக் காரணம் திருமறை குர்ஆன் தேர்ந்தெடுத்த வழியில் இவர்கள் பிரவேசிக்கவில்லை. இறைத்தூதரும் அவர்கள் தோழர்களும் காட்டித்தந்த மாதிரியைப் பின்பற்றவில்லை.

நிறுவன ரீதியில் கட்டமைப்பு வசதியுடன் ஜகாத் பணிகள் முழுவீச்சில் நடைபெற வேண்டுமென்று குர்ஆன் கூறுகிறது.  ‘வல்ஆமிலீன அலைஹா’ - என்பதன் பொருள் இவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஜகாத் வசூலிக்கின்ற, பகிர்ந்தளிக்கின்ற, கணக்கெடுக்கின்ற ஊழியர்களுக்கும் ஜகாத் நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறும்போது, அது ஜகாத் நிறுவன தொழிலாளர்கள் நியமனத்தைக் குறிக்கிறது என்று புரிய வேண்டும்.  இந்தச் சிறு வசனம் பைத்துஸ்ஸகாத் ஊழியர்களைப் பற்றியது. ஜகாத் நிறுவன ரீதியில் கட்டமைப்பு வசதியுடன் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அது வலியுறுத்துகிறது.

அப்படியாயின் நிறுவன ரீதியில் அதன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றாக வேண்டும் என்பது அல்லாஹ்வின் விருப்பம்.  இன்றைக்கு முஸ்லிம்களிடம் அப்படிப்பட்ட எந்த பைத்துஸ்-ஸகாத் நிறுவனமோ திட்டமோ இல்லை.

இறைவழியில் செலவு செய்தல், அதன் நன்மைகள், தத்துவங்கள் பற்றிப் பேசும் புத்தகங்கள் தமிழ் மொழியில் தட்டுப்பாடின்றிக் கிடைக்கின்றன.

ஆனால் அந்நூல்களில் ஜகாத் பற்றிக் கூடுதலாக எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

ஜகாத், ஒரு வழிபாடு மட்டுமின்றி வறுமை ஒழிப்புத் திட்டமும், பொருளாதார சமூகப் பாதுகாப்புத் திட்டமும் ஆகும்; அது பொருள் வழி வணக்கம் மட்டுமின்றி சமூக வாழ்வின் இருள் நீக்கும் வழிமுறையுமாகும். அதன் அடிப்படையில் ஜகாத்தின் முழு விவரங்களையும் ஆராய்ந்து, மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கேற்ப ஜகாத்தை விளக்கிக் கூறும் ஒரு நூல் இல்லாதது ஒரு பெருங்குறையாக இருந்து வந்தது. அக்குறையை நீக்கும் வகையில் உங்கள் கைகளில் தவழும் இந்நூல் வெளிவந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்

மதங்களும் இஸங்களும் வறுமை ஒழிப்புக்குத் தந்த தீர்வுகள் யாவை; அத்தீர்வுகளால் ஏன் வறுமை ஒழியவில்லை; இஸ்லாம் எவ்வாறு அதை ஒழித்தது; ஜகாத் அதற்கு எப்படி வகை செய்கிறது என்பன பற்றித் தெரிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாய் அமையும்.  திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் ஜகாத் பற்றி விரிவாகத் தமிழில் ஆராயும் முதல் நூல் இதுதான். 

ISBN: 978-81-232-0261-7

Quantity

Price: INR 100.00

Loading Updating cart...