இதழியல் வரலாற்றில் சமரசம்

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » அழைப்பியல் » இதழியல் வரலாற்றில் சமரசம்

சமரசம் இதழ் இந்தப் பூமியில் பிறந்து விழுந்த அந்தத் தருணம் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகள் தமிழக முஸ்லிம்களின் மார்க்க வரலாற்றிலும் சமுதாய வரலாற்றிலும் திருப்பு முனைகள் ஏற்பட்ட காலக் கட்டமாகும். கண்ணைக் கட்டிவிட்டதுபோல ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திலேயே சென்றுகொண்டிருந்த தமிழக முஸ்லிம்களின் கண்கட்டுகள் அவிழ்க்கப்பட்ட காலக்கட்டம் அது. மரபுசார்ந்த இஸ்லாம் மதத்தை அறிவு சார்ந்த வாழ்வியல் நெறியாக அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் சமரசத்திற்கு முக்கிய பங்கும் முதன்மைப் பங்கும் உண்டு.

பல்வேறு வரலாற்று, சமூகக் காரணங்களால் முஸ்லிம்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாதாரும் இஸ்லாத்தைத் தவறாகவே புரிந்து வைத்திருந்தார்கள்; அல்லது அரைகுறையாக அறிந்து வைத்திருந்தார்கள். இருதரப்பினருக்குமே சரியான இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டிய தேவை இருந்தது.

ஒருபுறம், அலட்சியத்தில் மூழ்கியிருந்த முஸ்லிம்களைத் தட்டியெழுப்பி, அவர்களின் வாழ்வியல் குறிக்கோளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது; மறுபுறம், முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் காணப்பட்ட இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களையும் தவறான கருத்துகளையும் களைய வேண்டியிருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், கூடுதல் குறைவு இன்றி இறை-நெறியை இருதரப்பினருக்கும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டியது ஒரு வரலாற்றுக் கடமையாகவே இருந்தது. காலம் விதித்த அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகத்தான் சமரசம் திங்கள் இருமுறையாக வெளிவரத் தொடங்கியது. ஆம்..! 15.6.1980 அன்றுதான் சமரசம் முதல் இதழ் வெளியானது. அல்ஹம்துலில்லாஹ்! அன்று முதல் இன்று வரை ஓரிதழ்கூட விடுபடாமல் 32 ஆண்டுகளாக இறைவழியில் - சத்தியப் பாதையில் சளைக்காமல் ‘சமரசம்’ நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

இஸ்லாம் என்றால் ஏதோ சில வழிபாடுகள், சில சடங்குகள், இறைநேசர்களின் சில அற்புதக் கதைகள் என்ற அளவில் மட்டுமே சொல்லப்பட்டுவந்த காலக்கட்டத்தில், அந்தக் குறுகிய கண்ணோட்டத்தைத் தள்ளித் தகர்த்தெறிந்து, இஸ்லாம் வழிபாடுகளின் தொகுப்பு மட்டுமன்று, சமுதாயம், அரசியல், கல்வி, இலக்கியம், பொருளியல், வணிகம், குடும்பம், திருமணம், குழந்தை வளர்ப்பு, மனித உரிமைகள், சமூக நல்லிணக்கம் என வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான இறைவனின் வழிகாட்டுதலே இஸ்லாம் எனும் கருத்தை ஓங்கி முழங்கி, தமிழகத்தில் ஒரு கருத்துப் புரட்சியை ஏற்படுத்தியது சமரசமே என்பதில் சற்றும் மிகையில்லை. இதற்காக மொழிநடை உட்பட இதழியலின் எல்லா வடிவங்களையும் உத்திகளையும் சமரசம் பின்பற்றியது.

உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் புதுமையைப் புகுத்தி, இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய சமரசம், தன் கருத்தியலை நிறுவுவதற்காக மேற்கொண்ட உத்திகள் குறித்தும் இதழியல் பாணிகள் குறித்தும் பேராசிரியர் மு.இ. அகமது மரைக்காயர் அவர்கள் சிறந்த முறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (பிஎச்டி) பெற்றுள்ளார். அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடுதான் இந்த நூல்.

இஸ்லாமியத் தமிழ் இதழியலின் முழு வரலாற்றையும் தொகுத்தும் வகுத்தும் தந்துள்ள ஆய்வாளரின் உழைப்பு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. இதழியல் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு யாருக்கும் சளைத்ததன்று என்பதையும் இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். எதிர்காலத்தில் இஸ்லாமிய இதழியல் குறித்து ஆய்வு செய்ய விரும்புவோருக்கு ஐஎப்டி வெளியிட்டுள்ள இந்த நூல் ஒரு முன்னோடி நூலாகத் திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அது மட்டுமன்று, ஓர் ஆய்வு எப்படிச் செய்யப்படவேண்டும் என்பதற்கு வழிகாட்டக் கூடிய முன்மாதிரி நூலாகவும் இது திகழ்கிறது.

ஆசிரியர்: முனைவர் மு.இ. அகமது மரைக்காயர்
ISBN 978-81-232-0251-8

Quantity

Price: INR 150.00

Loading Updating cart...