நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு

Welcome to IFT-Chennai.org » Products Page » Tamil Books » சுய முன்னேற்றம் » நபிகளார் வரைந்த கோடுகளில் மனித வாழ்வு

 

நபிகளார் வரைந்த வாழ்வியல் கோடுகளை இவ்வளவு அழகாக நமக்கு வரைந்துகாட்டியுள்ள இந்த நூலின் ஆசிரியர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசியத் தலைவர் ஆவார்.

 

சிறந்த மார்க்க அறிஞரும் எழுத்தாளரும் பேச்சாளருமான உஸ்தாத் அவர்கள், அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்தபோது அவர் போதித்த அனைத்துப் பாடங்களும் குறிப்பாக, நபிமொழிப் பாட வேளைகள் சிந்தனை விருந்தாய் அமையும் என மாணவர்கள் மனம் திறந்து பாராட்டுகின்றனர். ஆம்.. உண்மைதான். நபிமொழி தரும் கருத்தை, அதன் மொழியாக்கத்தைக் கடந்து ஊடறுத்துத் தேடும் பாங்கும், அதற்கு ஆதாரங்களாக முன்வைக்கும் குர்ஆனிய, வரலாற்றுச் சான்றுகளும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

 

இவ்வகையில், ஜமாஅத்தே இஸ்லாமி கொழும்பு நகரக் கிளையில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உஸ்தாத் அவர்கள் ஹதீஸ் விளக்கவுரை ஆற்றிவந்தார். அந்தத் தொடர் சொற்பொழிவுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சில ஹதீஸ்களுக்கான விளக்கங்களே இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.

 

பொதுவாகக் குர்ஆனையும் குறிப்பாக நபிமொழி-களையும் அறிஞர் பெருமக்கள் கையாளும்போது இஸ்லாமியச் சட்டங்களை விளக்கும் வகையில் அமைந்த வசனங்களுக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நிலையை நாம் காண்கிறோம். இஸ்லாமியச் சட்டத் துறையைப் பொறுத்தவரை இந்த அணுகுமுறை பெரிதும் விரும்பப்படுகிறது; வரவேற்கப்படுகிறது.

 

அதே சமயம், மனித வாழ்வியலின் ஏனைய பல்வேறு துறைகளுக்கான வழிகாட்டல்களைக் குர்ஆனும் நபிமொழி-யும் தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றையும் தொட்டுப்-பார்க்கும் ஒரு முயற்சியாக ஹதீஸ் விளக்கத் தொடரை அமைத்துக்கொண்டால் என்ன எனும் எண்ணம் நூலாசிரி-யரின் உள்ளத்தில் உதித்ததால், அந்த எண்ணத்தைச் செயல்-படுத்தும் முயற்சியில் அவர் தேர்வு செய்த சில நபிமொழி-களின் அழகிய விளக்கமே இந்த நூல்.

 

அல்லாஹ்வின் வேதத்தையும் அண்ணலார்(ஸல்) அவர்-களின் பொன்மொழிகளையும் மனிதர்களின் சொற்களால் விளக்கிவிடலாம் என்பது அவ்வளவு எளிதான செயலன்று. ஆயினும் அவற்றில் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொக்கிஷங்களில் ஒரு சிறுபகுதியையாவது சிந்தனைக்கு எட்டச் செய்யலாம் என்பதே இந்த நூலாக்க முயற்சிக்கான அடிப்படையாகும்.

இஸ்லாமிய வகுப்புகள், தனிப்பட்ட வாசிப்பு, அன்பளிப்பு, வெள்ளிக் கிழமை உரைகள், இதர சொற்பொழிவுகள் ஆகிய அனைத்துக்கும் இந்த நூல் ஒரு குறிப்பு நூலாகப் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. 

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

ISBN 978 81 232 0255 6

 

Quantity

Price: INR 100.00

Loading Updating cart...